Wednesday, May 12, 2010

ரமணர்-11

ரமணர் -11
லௌகீக வாழ்வில் நீடித்த வழக்கத்தினால் ஏற்பட்ட வைதீக ஆசாரங்களில் உள்ள மூட நம்பிக்கைகளைச் சிறிது சிறிதாக மாற்றவும் முற்பட்டார். ஆனால் கட்டாயப்படுத்துவது மட்டும் இல்லை. சிரிய சிரிப்புச் செய்கைகளினாலேயே இவற்றை விலக்கி வெற்றி பெற்றார்.



"அடடா, உன் புடவையை யாரோ தொட்டுவிட்டார்களே! ஐயையோ, தீட்டு தீட்டு! மடி கெட்டுப் போச்சே! போச்சு ஆசாரம்; போச்சு பக்தியெல்லாம்; மோட்சத்துக்கு குறுக்கே நிற்பதெல்லாம் இதுதான்" என்று சிரிப்பார்.



அழகம்மாளின் அந்திய காலத்தின் ஆறு வருடங்கள் இவ்வாறாகக் கழிந்தன. முடிவு நெருங்க நெருங்க, அன்னையும் முனிவரிடம் பூரண நம்பிக்கை வைத்து, அனைத்தையும் தத்தம் செய்துவிட்டதால், முனிவரின் பக்கத்திலிருந்து அவருக்குப் பூரணமான ஞானத்தைப் புகட்டமுடிந்தது.
அன்னையின் மகா சமாதி - பாகம் 10



1922- ஆம் ஆண்டு மே திங்கள் 10-ம்நாளன்று அன்னையின் ஆவி முடிவுற்ற தினம். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது. அன்னையின் மார்பில் வலக் கையையும் தலையில் இடக்கையையும் வைத்துக்கொண்டு மகரிஷிகள் நாள் முழுவதும் கண் கொட்டாமல் உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அன்னையின்

பிராணன் இதயத்தில் ஒடுங்கிப் புனிதமான அருட்ஜோதி ஆனந்தத்தில் கலந்தது.


அன்றுதான் அன்னையின் கடைசி நாள் என்று தெரிந்ததும் பக்தர்கள் பலர் மத்தியானமே சாப்பிடவில்லை. இரவு மறுபடியும் சமையல் ஆயிற்று. ஆனால் மகரிஷிகள் சாப்பிடக்கூட எழுந்திருக்கவில்லை. மூச்சு அடங்கி அன்னை மகா சமாதி அடைந்த பின்னரே எழுந்தார். அவர் குரலில் எந்தவிதமான கவலையோ, தழுதழுப்போ இல்லை.



"இனி நாம் சாப்பிடலாம், சாப்பிட வாருங்கள். தீட்டும் இல்லை, ஒன்றும் இல்லை." என்று அழைத்து எப்போதும் போல் பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தனர்.



மறுநாள் காலையில் சமாதிக் கிரியைகள் தொடங்கின. உறவினர் வந்தனர். ஆயிரக் கணக்கான பக்தர்களும் வந்து கூடினர். சுவாமியும் அவர்களுள் ஒருவரைப் போலவே தோன்றினார். உடற் கோயிலை அலங்கரித்து மலைக்கு அப்பாலுள்ள பாலி தீர்த்தம் என்னும் இடத்துக்கு எடுத்துச் சென்றனர்.

ரஸ்தாவுக்கு அப்பால் ஒரு குகை செய்து, பூ மேனியை இருத்தி உட்காரவைத்து, ஏராளமாக விபூதி, கற்பூரம், உப்பு முதலியவற்றைக் கொட்டினர். அதன் மேல் சமாதி கட்டி ஒரு லிங்கம் ஸ்தாபித்தனர்.



மாத்ருபூதேஸ்வரர் என்றபெயருடன் இன்றைக்கும் அதற்குத் தூப தீப நைவேத்தியங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கிருஷ்ணபட்சம் நவமி திதியில் மாத்ருபூதேஸ்வர மகாபூஜை சிறப்பாக நடைபெறுகிறது.



மகா பூஜையின் உட்கருத்து பின்வருவனவற்றால் நன்கு விளங்கும்: சில நாள் சென்றபின் அன்னை போய்விட்டதைப் பற்றி ஒருவர் பிரஸ்தாபித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மகரிஷிகள் குறுக்கிட்டு, "இல்லை போய்விட்டாளாவது? .... கலந்துகொண்டாள்....... அவ்வளவுதான்." என்றுகூறினார்.



மற்றொருமுறை மகரிஷிகள் கூறியதாவது: " ஆமாம்! அவளிடம் இதுபலித்தது. இதற்கு முன் வேறு ஒருவருக்கு- முடிவு நெருங்கியபோது-- இதே முறையைக் கையாண்டேன்; ஆனால் காரியம் சித்திக்கவில்லை. கண்ணைத் திறந்து ஒருமுறை விழித்தார். பிராணன் போய்விட்டது."



அன்னையின் உச்சிக் கமலத்திலும், இருதயகமலத்திலும் கரங்களை வைத்துக் கொண்டிருந்த அந்த பத்துப் பன்னீரண்டு மணி நேரத்தில் நேர்ந்த சம்பவங்களைக் குறித்து மகரிஷிகள் சொல்லியிருப்பதாவது:



" இயற்கையாக அமைந்த எண்ணங்களும் பூர்வ ¦ஜன்ம அநுபவங்களும் வெகு துரிதமாக வேலை செய்தன. வெளி உலகத்தின் அறிவு மங்கிவிட்டதால் சூக்ஷம நிலையிலே ஒவ்வொரு காட்சியும் அவள் முன்பு அடுத்தடுத்துத் தோன்றி மறைந்தது. அந்த ஆத்மா எத்தனையோ விதமான அநுபவங்களில் ஆழ்ந்து வெகு வேகமாகக் கடைத்தேறிச் சென்றது."



அச்சமயத்தில் பகவான்தமது திருக்கரங்களை அன்னையின் சிரத்திலும், மார்பிலும் பதித்து, ஜீவனை இருதயத்தில் ஒடுங்கச் செய்யாதிருந்தால் அது எத்தனையோ ஜன்மங்கள் எடுக்கவேண்டிஇருந்திருக்கும்.



கடைசியாக ஆத்மாவானது பல பல சூக்‌ஷ்ம சரீரங்களைக் களைந்தெறிந்து அஞ்ஞான நிலையை முடிவாகக்

கடந்து, நித்தியானந்த நிர்வாண நிலையாகிய மீளாப் பதவியை அடைந்தது.



தெய்வீகமணம் கமழும் ஆசிரமத்தின் புனிதமான காட்சியையும் அன்னையின் சமாதியின் மேல் பகவான் கொண்டுள்ள பக்தியையும் உணர்ந்தோருக்கு இந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.



மாத்ருபூதேஸ்வர மகா சந்நிதானம்.



அன்னையின் சமாதியின் மேல் சாஸ்திர லட்சணம் பொருந்திய ஓர் ஆலயம் அமைக்கப்பெற்றுள்ளது. பகவான் அதைத் தம் அநுக்கிரகத்தால் பிரதிஷட்டை செய்து பக்தர்கள் தம் தம் அபீஷடங்களை அடைய உதவி செய்துள்ளார்.

No comments:

Post a Comment